ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், ஆளும் தெலுங்கு தேசம் கட்சி (TDP), எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி (YSRCP) தொண்டர்களிடையே பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டது.
அன்னமய்யா மாவட்டத்தின் புங்கனூர் பகுதியில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.வி. மிதுன் ரெட்டி, அக்கட்சியின் வேட்பாளர்களுடன் வேட்புமனுத் தாக்கல் செய்யச் சென்றபோது மோதல் வெடித்தது.
அப்போது கற்கள் மற்றும் தடிகளால் வாகனங்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மிதுன் ரெட்டியின் வாகன அணிவகுப்பில் சென்ற இரண்டு வாகனங்கள் சேதமடைந்தன. மோதலில் உள்ளூர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இரு தலைவர்கள் காயமடைந்ததாகவும், மிதுன் ரெட்டியின் பாதுகாவலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, அன்னமய்யா மாவட்டத்தின் ராயச்சோட்டி பகுதியிலும் வன்முறை ஏற்பட்டது. அங்கு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதுடன், சில வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடங்களுக்கு விரைந்த காவல்துறையினர் பாதுகாப்பை அதிகரித்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டனர். புங்கனூரில் மிதுன் ரெட்டியைப் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
இந்தச் சம்பவத்துக்கு தெலுங்கு தேசம் கட்சியும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் பரஸ்பரம் குற்றம்சாட்டின. தங்கள் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்வதைத் தடுக்க வன்முறை நடத்தப்பட்டதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.
மறுபுறம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரே மோதலைத் தூண்டியதாக தெலுங்கு தேசம் கட்சியினர் குற்றம்சாட்டினர். தேர்தல் நடைமுறைகள் தடையின்றி நடைபெற உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
