காவலர்களின் குழந்தைகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம்கள்: டிஜிபி அறிவிப்பு


 ஆவடி: தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனை மேம்படுத்தும் நோக்கில், ‘காவல் குடும்பம்’ திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்கள் மற்றும் காவலர்களின் குழந்தைகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.


காவல்துறையினரின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு, டிஜிபியின் ஆலோசனையின் பேரில் கடந்த மாதம் ‘காவல் குடும்பம்’ திட்டம் தொடங்கப்பட்டது.


இதன் ஒரு பகுதியாக, ஆவடி காவல் ஆணையரகத்தில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மேலும், ஆவடி சத்தியமூர்த்தி நகர் காவலர் குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள மழலையர் காப்பகமும் திறந்து வைக்கப்பட்டது.


‘காவல் குடும்பம்’ திட்டத்தின் தலைவர் வனிதா அகர்வால் மழலையர் காப்பகத்தைத் திறந்து வைத்தார். காவலர் குடியிருப்பு அருகே உள்ள காவல்துறை மாநாட்டு மையத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமையும் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்.


அப்போது பேசிய அவர், காவலர்களின் குழந்தைகளின் திறமைகளை வளர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் பயிற்சி முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவித்தார். காவலர்கள் மீது புகார்கள் எழாத வகையில் பணியாற்ற வேண்டும் என்றும், காவல்துறையின் சிறப்பான செயல்பாடுகள் பொதுமக்களைச் சென்றடைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


மேலும், காவல் நிலையங்களுக்கான அவசரகால நிதியை மாதந்தோறும் ரூ.3,000 முதல் ரூ.8,000 வரை வழங்கி வந்த நிலையில், புதிய அரசு அதை ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்தார்.


ஆவடியில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் விளையாட்டுத் திறன், உடல் மற்றும் மனத் திறன்களை மேம்படுத்தும் வகையில் விளையாட்டுத் திடலுடன் கூடிய சிறுவர் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


இந்த நிகழ்ச்சியில் ஆவடி காவல் ஆணையர் செந்தில்குமார், அவரது மனைவி அருள்ஜோதி, இணை ஆணையர் சிவக்குமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Previous Next

نموذج الاتصال