மூத்த பாஜக தலைவர் எல்.கே. அத்வானி மருத்துவமனையில் அனுமதி


 புதுடெல்லி: பாஜக மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான லால் கிருஷ்ண அத்வானி (98), நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்ட தொற்று காரணமாக டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அக்டோபர் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7.30 மணியளவில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு நுரையீரல் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.


அத்வானியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டு, மூத்த நரம்பியல் மருத்துவ ஆலோசகர் டாக்டர் வினீத் சூரி தலைமையிலான மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார்.


இதற்கு முன்பு, கடந்த மே மாதத்திலும் வயது தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளுக்காக அத்வானி இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார்.


பாஜகவின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய தலைவர்களில் ஒருவரான அத்வானி, அக்கட்சியின் தேசியத் தலைவராகப் பலமுறை பதவி வகித்துள்ளார். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், 2002 முதல் 2004 வரை இந்தியாவின் துணைப் பிரதமராகப் பணியாற்றினார்.


மேலும், 1998 முதல் 2004 வரை மத்திய உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். நாட்டின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா விருது அவருக்கு 2024ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

Previous Next

نموذج الاتصال