தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் வசூலித்து மோசடி செய்ததாக எழுந்த புகாரில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநரின் ஒப்புதல் தேவையில்லை என்று தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கான அனுமதி, டிடிசிபி உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாகப் புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாகத் தனியார் பள்ளி நிர்வாகிகள் அளித்த புகார்களின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார், சுரேஷ், ராஜா உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆளுநரின் ஒப்புதல் பெறாமல் அரசுத் துறைச் செயலரின் அனுமதியுடன் அன்பில் மகேஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவரது தரப்பு வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார். இதையடுத்து, ஆளுநரின் அதிகாரம் தொடர்பாக திமுக முன்பு தெரிவித்த கருத்துகளைச் சுட்டிக்காட்டி நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இந்த வழக்கில் போலீஸார் தாக்கல் செய்த பதில் மனுவில், இதுவரை 177 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், ‘கட்சி நிதி’ என்ற பெயரில் பணம் வசூலிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்ய ஆளுநரின் ஒப்புதல் தேவையில்லை என்றும், அரசுத் துறைச் செயலரின் ஒப்புதல் போதுமானது என்றும் போலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அரசியல் காரணங்களுக்காகப் பள்ளி நிர்வாகிகளை அச்சுறுத்தி வாக்குமூலம் பெற்றதாக மனுதாரர் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் போலீஸார் மறுத்துள்ளனர். விசாரணையைத் தடுக்கவே வழக்கை ரத்து செய்யக் கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
