பாக் நீரிணையில் இழுவைமடி விசைப்படகுகளுக்குத் தடை விதிக்க வேண்டும்: இலங்கை மீனவர்கள் கோரிக்கை


 பாக் நீரிணை கடற்பகுதியில் இழுவைமடி விசைப்படகுகளின் மீன்பிடி நடவடிக்கைகளை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என இலங்கை மீனவர்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இலங்கை வட மாகாண கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் என்.எம். ஆலம், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு இது தொடர்பாகக் கடிதம் எழுதியுள்ளார்.


அந்தக் கடிதத்தில், 2016-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா–இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தையில், பாக் நீரிணை பகுதியில் புதிய இழுவைமடி விசைப்படகுகளுக்கு அனுமதி வழங்குவதையும், ஏற்கெனவே உள்ள படகுகளைப் புதுப்பிப்பதையும் தடை செய்ய முடிவு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தமிழகத்தில் முந்தைய ஆட்சிக் காலத்தில் இந்த முடிவு முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


தடை விதிக்கப்பட்ட பின்னரும் ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த சில விசைப்படகு உரிமையாளர்கள் படகுகளின் நீளத்தையும் குதிரைத்திறனையும் அதிகரித்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த ஆழ்கடல் இழுவைமடி விசைப்படகுகளும் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து அந்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாகக் கூறியுள்ளார்.


இத்தகைய அத்துமீறல்கள் தொடர்பாக இலங்கை மீனவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக விசைப்படகுகள் அதிக அளவில் சிறைபிடிக்கப்பட்டதுடன், மீனவர்களும் கைது செய்யப்பட்டதாகக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முந்தைய தமிழக அரசுகள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.


இதற்கிடையே, ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் ஃபைபர் விசைப்படகுகளுக்கு தமிழக மீன்வளத் துறை தடை விதித்துள்ளதை இலங்கை மீனவர்கள் வரவேற்றுள்ளனர். இருப்பினும், சிலர் அந்தப் படகுகளுக்கு அனுமதி பெற முயற்சிப்பதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


இந்தியா, இலங்கை அரசுகளும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யும் தலையிட்டு, பாக் நீரிணையில் இழுவைமடி விசைப்படகுகளுக்கு முழுமையான தடை விதித்து இருநாட்டு மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous Next

نموذج الاتصال