பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மேடையில் அமர்ந்தது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார். மின்வெட்டு பிரச்சினையைச் சரிசெய்யாமல், இதுகுறித்து அமைச்சர் நிர்மல் குமார் பேசிக்கொண்டிருக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக மையக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மையக்குழு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கட்சியின் எதிர்கால வளர்ச்சி, வரவிருக்கும் இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், பிரதமர் நிகழ்ச்சியில் தான் மேடையில் அமர்ந்தது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்றார். அதே நேரத்தில், தான் மேடையில் அமர்ந்த விவகாரம்தான் நாட்டுக்கு இப்போது தேவையான பிரச்சினையா என்றும் கேள்வி எழுப்பினார்.
பிரதமரும் தமிழக முதல்வரும் இணைந்து மெட்ரோ திட்டத்தைத் தொடங்கி வைத்தது, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான இணக்கத்தைக் காட்டுவதாக அவர் கூறினார்.
தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாகத் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என்றும் விமர்சித்தார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். முதல்வர் விஜய்க்கு தான் சால்வை அணிவித்த நிகழ்வைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது செவிலியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த தமிழக வெற்றிக் கழகம், தற்போது அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்வதாகவும் அவர் விமர்சித்தார்.
தமிழகம் முழுவதும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறிய நயினார் நாகேந்திரன், இந்தப் பிரச்சினையில் முதல்வரும் அமைச்சர்களும் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
