தருமபுரி ஒட்டப்பட்டி வள்ளுவர் நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் ஆட்டுக்கால் தீய்க்கும் தொழில் நடைபெறுவதால், நச்சு வாயு பரவி உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதாகக் கூறி 75 வயது மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம், ஒட்டப்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (75). மறைந்த சார்பு ஆட்சியரின் மனைவியான இவர், தனது மகள் ஹேமமாலினி (55) உடன் அப்பகுதியில் வசித்து வருகிறார்.
இவர்களது வீட்டின் அருகிலுள்ள கட்டடத்தில், இயந்திரங்களைப் பயன்படுத்தி ஆட்டுக்கால்களைத் தீய்த்து, அவற்றைக் கடைகளுக்கு விநியோகம் செய்யும் தொழில் தினமும் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியின்போது கடுமையான துர்நாற்றத்துடன் அம்மோனியா வாயு வெளியேறி, தங்களது வீட்டிற்குள் பரவுவதாக ராஜேஸ்வரி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இதனால் கண்களில் எரிச்சல், தொடர்ந்து கண்ணீர் வடிதல், நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இரவு, பகல் பாராமல் கண்களைத் திறக்க முடியாமலும், தூக்கமின்றியும் அவதிப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளரிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
குடியிருப்புப் பகுதியில் சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துவதுடன், பொதுமக்களின் உடல்நலத்தையும் பாதிக்கும் வகையில் செயல்படும் இந்தத் தொழில் குறித்து அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என ராஜேஸ்வரி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
