தமிழகம் உட்பட 17 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி: தேர்தல் ஆணையம்


 தமிழகம் உட்பட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்கும் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளை (SSR) மேற்கொள்ள இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதுடன், ஏற்கெனவே உள்ள பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர்களை இணைப்பதும் இப்பணியின் முக்கிய நோக்கமாகும்.


இந்தத் திருத்தப் பணிகளுக்கான தகுதி நாளாக 2027 ஜனவரி 1 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 14 மாநிலங்களிலும், அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களிலும் இப்பணி நடைபெற உள்ளது.


திட்டத்தின்படி, நவம்பர் 2-ம் தேதிக்குள் வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்படும். நவம்பர் 12-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன்பிறகு, பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் ஆட்சேபனைகளை டிசம்பர் 11-ம் தேதி வரை தெரிவிக்கலாம். பெறப்படும் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் மீது டிசம்பர் 28-ம் தேதிக்குள் முடிவெடுக்கப்பட வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியல் 2027 ஜனவரி 4-ம் தேதி வெளியிடப்படும்.


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் படிவம் 6 மூலம் விண்ணப்பிக்கலாம். 2027 ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய தகுதி தேதிகளுக்கான முன்கூட்டிய விண்ணப்பங்களையும் தேர்தல் பதிவு அலுவலர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.


வாக்காளர் பெயர்களை நீக்குவதற்கான பரிந்துரைகள் மொத்த வாக்காளர்களில் 2 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தால், தேர்தல் பதிவு அலுவலர்கள் நேரடியாகச் சரிபார்க்க வேண்டும். பெயர் நீக்கம் தொடர்பாக முடிவெடுப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட நபருக்கு விளக்கமளிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.


ஒரு வாக்குச்சாவடியில் அதிகபட்சம் 1,200 வாக்காளர்கள் மட்டுமே இருக்க வேண்டும். வாக்காளர்கள் இரண்டு கிலோமீட்டருக்கு மேல் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடாது என்றும், வாக்குச்சாவடிகள் தரைத்தளத்தில் அமைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சிறப்பு சுருக்கத் திருத்தம் (SSR) என்பது ஏற்கெனவே உள்ள வாக்காளர் பட்டியலில் தேவையான மாற்றங்களைச் செய்யும் நடைமுறையாகும். சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) முறையில் பட்டியல் விரிவாக மறுசீரமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Next

نموذج الاتصال