கோவை: பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவுத் துறை அதிகாரியிடம் இந்திய கடற்படையின் ரகசிய பாதுகாப்புத் தகவல்களை கசியவிட்டதாகக் கூறப்படும் கடற்படை மாலுமி கோவையில் கைது செய்யப்பட்டார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரதீப் முகர்ஜி (31), விசாகப்பட்டினத்தைத் தளமாகக் கொண்ட கிழக்கு கடற்படையில் மாலுமியாக பணியாற்றி வருகிறார். கோவை ரெட்ஃபீல்டு பகுதியில் உள்ள இந்திய கடற்படை பயிற்சி மையமான ஐஎன்எஸ் அக்ராணியில் நடைபெறும் மேலாண்மை மேம்பாட்டுப் பயிற்சிக்காக கடந்த ஒரு வாரமாக அவர் அங்கு தங்கியிருந்தார்.
இந்த நிலையில், ஆந்திர காவல் துறையின் சிறப்பு உளவுப் பிரிவு போலீஸார் இரண்டு நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்து பிரதீப் முகர்ஜியை கைது செய்தனர்.
பயங்கரவாதக் குழுக்கள், எல்லை தாண்டிய உளவு நடவடிக்கைகள் மற்றும் உயர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு உளவுப் பிரிவினரின் விசாரணையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவுத் துறை அதிகாரியிடம் இந்திய கடற்படையின் ரகசிய பாதுகாப்புத் தகவல்களை அவர் பகிர்ந்ததாக முதற்கட்டமாக தெரியவந்துள்ளது.
மேலும், சமூக ஊடகங்கள் மூலம் பாகிஸ்தானிய பெண் உளவாளியிடம் விசாகப்பட்டினம் கடற்படைத் தளம் தொடர்பான தகவல்களை பகிர்ந்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து, பிரதீப் முகர்ஜி குறித்த தகவல்களை இந்திய கடற்படை அதிகாரிகளிடம் தெரிவித்து, அவரைக் கைது செய்வதற்கான அனுமதியை ஆந்திர சிறப்பு பிரிவு போலீஸார் பெற்றனர்.
பின்னர் ஆந்திராவில் இருந்து கோவைக்கு வந்த சிறப்புக் குழுவினர் பிரதீப் முகர்ஜியை கைது செய்தனர். அவரை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் விஜயவாடாவுக்கு அழைத்துச் சென்றனர்.
