ஜந்தர் மந்தர் அத்துமீறல் புகாருக்கு மத்தியில் டெல்லி காவல் அதிகாரிக்கு பதவி உயர்வு


 புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் அக்டோபர் 3-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது, பெண் பத்திரிகையாளரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான உதவி காவல் ஆணையர் விவேக் பகத், கூடுதல் துணை காவல் ஆணையராக பதவி உயர்வு பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


போராட்டத்தின்போது பெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்த சில நாட்களிலேயே விவேக் பகத்துக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


எனினும், இந்தப் பதவி உயர்வு வழக்கமான காலமுறை அடிப்படையிலான நடைமுறையின் ஒரு பகுதியாகும் என்றும், இதற்கான பரிந்துரைகள் நீண்ட காலத்துக்கு முன்பே அனுப்பப்பட்டுவிட்டதாகவும் உயர் காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


விவேக் பகத்துடன் மேலும் 11 காவல் அதிகாரிகளுக்கும், அவரது பேட்சைச் சேர்ந்த 3 அதிகாரிகளுக்கும் இதேபோன்ற பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


இந்த நடவடிக்கைக்கு காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் திப்கே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் பிருந்தா காரத், ஆயிஷி கோஷ் உள்ளிட்டோரும் நாடாளுமன்ற வீதி காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.


அக்டோபர் 3-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது 3 பெண் பத்திரிகையாளர்களிடம் சில காவல் துறையினர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாத நிலையில், புகார்கள் தொடர்பான விசாரணை டெல்லி காவல் துறையின் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Previous Next

نموذج الاتصال