சென்னை: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த விமானத்தில், ரூ.5.26 கோடி மதிப்புள்ள 15 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பாங்காக்கில் இருந்து வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த 28 வயது இளைஞர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று திரும்பிய அவர் கொண்டு வந்த சூட்கேஸை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சூட்கேஸில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த உணவுப் பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றை பிரித்து சோதனை செய்தபோது, அதற்குள் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சோதனையில் மொத்தம் 15 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.5.26 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சாவை கடத்தி வந்ததாக சந்தேகிக்கப்பட்ட 28 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட உணவுப் பொருட்களின் பாக்கெட்டுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
