சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறி செய்தியாளர் சந்திப்பு நடத்தியதாகக் கூறி, மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் மீது தவெக சார்பில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் அக்டோபர் 4-ம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, அதற்கு முந்தைய 48 மணி நேரம் அமைதிக்காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் வேட்பாளர்கள் பொதுக்கூட்டம், ஊர்வலம், தேர்தல் பிரச்சாரம் மற்றும் ஊடக சந்திப்பு உள்ளிட்டவற்றை நடத்தக் கூடாது என விதிமுறைகள் உள்ளன.
இந்நிலையில், திமுக வேட்பாளர் பரந்தாமன் அக்டோபர் 5-ம் தேதி சென்னையில் உள்ள கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் தவெக சார்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா புகார் மனு அளித்தார்.
தங்கள் கட்சி வேட்பாளர் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு பிரச்சாரத்தை நிறுத்தியுள்ள நிலையில், பரந்தாமன் ஊடகங்கள் வாயிலாக நேரடியாக வாக்கு சேகரிக்கும் நோக்கில் செய்தியாளர் சந்திப்பை நடத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வாக்காளர்களின் சுதந்திரமான முடிவில் தலையிடும் சட்டவிரோத நடவடிக்கை எனக் குறிப்பிட்டுள்ள தவெக, பரந்தாமன் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளது.
மேலும், வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் வரை பரந்தாமன் மதுராந்தகம் தொகுதிக்குள் நுழைவதற்கும் தடை விதிக்க வேண்டும் என தவெக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
