நாகர்கோவில்: நாகர்கோவிலை அடுத்த தம்மத்துக்கோணத்தைச் சேர்ந்த பெண் யூடியூபர் மதுமிதா (28) மீது முதியவரிடம் இருந்து 5 பவுன் நகையை பறித்ததாக ராஜாக்கமங்கலம் போலீஸார் திருட்டு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி கே.டி.சி. நகரைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் பேச்சிமுத்து (89), முதுகுவலிக்காக பிசியோதெரபி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், தம்மத்துக்கோணத்தைச் சேர்ந்த மதுமிதா அவருக்கு அறிமுகமானதாக கூறப்படுகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு மதுமிதா திருநெல்வேலிக்கு வந்தபோது, பேச்சிமுத்துவின் காரில் ஏறி அவருக்கு பிசியோதெரபி செய்ய முயன்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பேச்சிமுத்து விருப்பம் தெரிவிக்காததால், மதுமிதாவை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு வீட்டுக்குச் சென்றதாக கூறியுள்ளார். பின்னர் தனது 5 பவுன் நகை காணாமல் போனதை அவர் கவனித்துள்ளார்.
இதுகுறித்து மதுமிதாவிடம் கேட்டபோது, தன்னைப் பற்றி அவதூறாக பேசி அவமானப்படுத்திவிடுவதாக அவர் மிரட்டியதாகவும் பேச்சிமுத்து தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் ராஜாக்கமங்கலம் போலீஸார் மதுமிதா மீது திருட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, மதுமிதாவின் வீட்டில் 4 பேர் சேர்ந்து நகை மற்றும் பணத்தை திருடியதாக ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் 118 பவுன் நகைகள் திருடப்பட்டதாக மதுமிதா புகார் அளித்திருந்தார்.
ஆனால், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 98 பவுன் நகைகள் மட்டுமே மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் திருட்டு போன நகைகளின் அளவை அதிகமாக குறிப்பிட்டு போலீஸாரிடம் பொய் புகார் அளித்ததாகவும் மதுமிதா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
