கர்நாடக மாநிலத்தின் புதிய ஆளுநராக டாக்டர் சுதா யாதவ் அக்டோபர் 16-ம் தேதி பதவியேற்றார். பெங்களூருவில் உள்ள லோக் பவனில் நடைபெற்ற விழாவில், கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி விபு பாக்ரு அவருக்குப் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
விழாவில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், துணை முதல்வர் ஜி. பரமேஸ்வரா, பதவியிலிருந்து விடைபெற்ற ஆளுநர் தாவர்சந்த் கெலாட், அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, முந்தைய ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சுதா யாதவை புதிய ஆளுநராக நியமித்தார்.
ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த சுதா யாதவ், 1999 முதல் 2004 வரை மகேந்திரகர் மக்களவைத் தொகுதி உறுப்பினராகப் பணியாற்றியவர். பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினராக 2019 முதல் 2022 வரை பணியாற்றினார்.
வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள இவர், ஐஐடி ரூர்க்கியில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். அவரது கணவர் சுக்பீர் சிங் யாதவ், எல்லைப் பாதுகாப்புப் படையில் துணைக் கமாண்டன்டாகப் பணியாற்றியபோது, 1999-ம் ஆண்டு கார்கில் போரில் உயிரிழந்தார்.
கர்நாடகத்தின் இரண்டாவது பெண் ஆளுநராக சுதா யாதவ் பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்பு வி.எஸ். ராமதேவி 1999 முதல் 2002 வரை கர்நாடக ஆளுநராகப் பணியாற்றினார்.
