போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் போலீஸார் அத்துமீறல்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு


 டெல்லியில் ஜனநாயகத்துக்காகப் போராடும் மாணவர்கள் மற்றும் பெண்களிடம் காவல்துறையினர் அத்துமீறி நடப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.


தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது, மாணவர்கள் மீது போலீஸார் அடக்குமுறையைக் கையாள்வதாகப் புகார்கள் எழுந்தன.


இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் பெண்கள் மீது டெல்லி போலீஸார் நடத்தும் வன்முறைகள் எல்லை மீறுவதாகக் குறிப்பிட்டுள்ளார். பாலியல் துன்புறுத்தல், ஆடைகளைப் பிடித்து இழுத்தல் உள்ளிட்ட அத்துமீறிய செயல்களில் காவல்துறையினர் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.


போராட்டக்காரர்களின் குரலை ஒடுக்குவதற்கான முயற்சியாகவே இந்தச் செயல்கள் நடைபெறுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மீண்டும் யாரும் கேள்வி கேட்கத் துணியாத வகையில் மக்களை அச்சுறுத்தி அவமானப்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.


மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் அதிகாரம் குறையும் என்ற அச்சம் காரணமாகவே, இளைஞர்கள் மற்றும் பெண்கள் மீது காவல்துறையினர் மூலம் வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.


போராட்டத்தில் காவல்துறையினர் நடந்துகொண்ட விதம் தொடர்பான குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

Previous Next

نموذج الاتصال