தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூகானஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி (50), பாலக்கோடு அரசு போக்குவரத்துப் பணிமனையில் கடந்த 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். அங்கு கட்டுப்பாட்டாளர் (கண்ட்ரோலர்) பொறுப்பில் இருந்த அவர், உடல்நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், பணிச்சூழல் காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகவும், தனக்கு மாற்றுப் பணி வழங்குமாறு பணிமனைக் கிளை மேலாளரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நேற்று அலுவலகத்தில் முனுசாமி மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து, சக ஊழியர்கள் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்த்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை கழிவறைக்குச் சென்றபோது தூக்கிட்ட நிலையில் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முனுசாமியின் உயிரிழப்புக்கான காரணம் மற்றும் அவர் முன்வைத்ததாகக் கூறப்படும் பணிமாற்றக் கோரிக்கை தொடர்பான விவரங்கள் விசாரணைக்குப் பின்னரே முழுமையாகத் தெரியவரும்.
