சென்னை: தமிழக அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.
தமிழகத்தில் தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து, முந்தைய திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘விடியல் பயணத் திட்டம்’ விரிவுபடுத்தப்பட்டு ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தை முதல்வர் விஜய் கடந்த அக்டோபர் 2-ம் தேதி தொடங்கி வைத்தார்.
மாநிலம் முழுவதும் 12,600-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் கலாமணி, திட்டத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்வதால் தனியார் பேருந்துகளுக்கு கடுமையான நிதி இழப்பு ஏற்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்து தொழிலை கைவிட வேண்டிய நிலைக்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் தள்ளப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
பெண் பயணிகளிடம் மட்டும் கட்டணம் வசூலிக்காமல் இருப்பது அரசியலமைப்பு வழங்கியுள்ள சம உரிமைக்கு எதிரானது என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்ததன் அடிப்படையில் மட்டுமே திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், இதுவரை முறையான அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்து, வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை திட்டத்தை செயல்படுத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் கோரியுள்ளார்.
