சென்னை: தமிழகத்தில் மகளிர் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் ‘வெற்றி மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா 10 மகளிர் தொழில்முனைவோர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அந்தந்த தொகுதி எம்எல்ஏ.க்கள் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள், தகுதியின் அடிப்படையில் தொழில் முதலீட்டுக் கழகத்தால் பரிசீலிக்கப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு செய்யப்படும் பெண்கள், தொழில் தொடங்குவதற்குத் தேவையான நிலம் வாங்குதல், கட்டிடம் கட்டுதல், புதிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குதல் உள்ளிட்ட பணிகளுக்காக இந்தக் கடனுதவியை பயன்படுத்தலாம்.
இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை கடன் பெற முடியும். தற்போது கடனுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 9.95 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக தொழில்முனைவோராகும் பெண்களுக்கு சிறப்புத் தொழிற்பயிற்சியும் வழங்கப்படும். கடன் தொகையை திருப்பிச் செலுத்த அதிகபட்சமாக 9 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
தொழில் தொடங்கும் ஆரம்பகட்ட சிரமங்களை கருத்தில் கொண்டு, அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை தவணை ஒத்திவைப்பு காலமும் வழங்கப்படும். அதன்பின்னர் கடன் தொகையை மாதாந்திர தவணை முறையில் திருப்பிச் செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோரின் தனிநபர் சிபில் ஸ்கோர் 600-க்கு அதிகமாக இருக்க வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
