சென்னை: மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இரு தொகுதிகளிலும் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர்.
தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
இரு தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டன. தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் பிரச்சாரம் செய்தார்.
திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும், அதிமுக சார்பில் பழனிசாமியும் வாக்கு சேகரித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் விதிமுறைகளின்படி, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக பொதுப் பிரச்சாரம் நிறைவடைய வேண்டும் என்பதால், நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது.
இரு தொகுதிகளிலும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், கட்சி பணியாளர்கள் மற்றும் வாக்காளர்கள் அல்லாதவர்கள் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் தங்கியிருந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர்.
வாக்குப்பதிவை முன்னிட்டு இரு தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதிவான வாக்குகள் அக்டோபர் 9-ம் தேதி எண்ணப்பட உள்ளன.
