பட்டாசு விலை 15% வரை உயர்வு; தீபாவளி தற்காலிக கடைகளுக்கு அனுமதி

சிவகாசி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளன. அதே நேரத்தில், உற்பத்தி குறைவு மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக பட்டாசுகளின் அடக்க விலை 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.


சிவகாசி பகுதியில் 1,100-க்கும் மேற்பட்ட அனுமதி பெற்ற பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. பேரியம் நைட்ரேட் பயன்படுத்துவதற்கான தடை, இணைப்பு வெடிகள் உற்பத்திக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் தற்போது சுமார் 60 சதவீத வகை பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.


கடந்த 2 ஆண்டுகளாக பட்டாசு உற்பத்தி குறைந்திருந்தாலும், விலை உயர்வின் காரணமாக தீபாவளி விற்பனை ரூ.6,000 கோடி அளவில் நடைபெற்றுள்ளது.


விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் ஆண்டு முழுவதும் செயல்படும் நிரந்தர பட்டாசு கடைகளுக்கான உரிமம் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 2,500-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகளில் ஆடிப் பெருக்கு நாளில் இருந்தே பட்டாசு விற்பனை தொடங்கியுள்ளது.


தற்போது தீபாவளி விற்பனைக்காக தமிழகம் முழுவதும் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


உற்பத்தி கட்டுப்பாடுகள், மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் போக்குவரத்து செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் சில்லறை விற்பனை விலை 20 முதல் 25 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும், தீபாவளி நெருங்கும் நேரத்தில் பொதுமக்கள் அதிகம் விரும்பும் பேன்சி ரக பட்டாசுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Previous Next

نموذج الاتصال