சென்னை: பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு, ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கத்தினர் சென்னை எழும்பூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான செவிலியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்களுக்கு ஆதரவாக திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜும் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
இடைநிலை சுகாதாரப் பணியாளர்களுக்கு தற்போது மாதம் ரூ.21,000 ஊதியம் வழங்கப்படுவதாகவும், மற்ற மாநிலங்களில் அதிக ஊதியம் வழங்கப்படுவதால் தமிழகத்திலும் ரூ.45,000 ஊதியம் வழங்க வேண்டும் என்றும் சங்கத் தலைவர் சுந்தரி வலியுறுத்தினார்.
கடந்த 2023-ம் ஆண்டு முதல் ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என்றும், இடைநிலை சுகாதார செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும், தவெக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி ஒப்பந்தப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், சுகாதாரப் பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம உரிமை மற்றும் ஊதியம் கிடைக்கவில்லை என்றும், செவிலியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறினார்.
இரவில் போராட்டம் தொடர்ந்ததால், போராட்டத்தில் ஈடுபட்ட 1,000-க்கும் மேற்பட்ட செவிலியர்களை போலீஸார் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
இதனிடையே, போராட்டத்துக்கு ஆதரவாக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜும் கைது செய்யப்பட்டார்.
