சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் 4,724 தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கு சுமார் 49 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தகுதியானவர்களைத் தேர்வு செய்து பணி ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் செவிலியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதையடுத்து தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் 11 மாதங்கள் தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த முறையில் 4,724 செவிலியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்தப் பணியிடங்களுக்கு மாதம் ரூ.21 ஆயிரம் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதார நலவாழ்வுச் சங்கங்கள் மூலம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தமிழகம் முழுவதும் இந்தப் பணியிடங்களுக்கு 49 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்காலிக அடிப்படையிலான செவிலியர் நியமனத்துக்கு சில செவிலியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பணியில் சேர பலர் விருப்பம் தெரிவித்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாவட்ட சுகாதார நலவாழ்வுச் சங்கங்கள் மூலம் பணி ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை சமாளிக்க இந்தப் பணியிடங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
