தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலின் தசரா திருவிழா அக்டோபர் 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசூர சம்ஹாரம் அக்டோபர் 20-ம் தேதி நள்ளிரவு நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா அக்டோபர் 11-ம் தேதி தொடங்குகிறது.
அன்று அதிகாலை கொடிப்பட்டம் யானை மீது ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, காலை 5 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும். இதைத் தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மஞ்சள் காப்பு அணிவிக்கப்படும்.
பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராகச் சென்று அம்மனுக்கு காணிக்கை வசூலிப்பார்கள்.
கொடியேற்ற நாளில் இரவு 10 மணிக்கு சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் அன்னை முத்தாரம்மன் திருவீதியுலா நடைபெறும். தொடர்ந்து அக்டோபர் 19-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் அம்மன் பவனி நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் அக்டோபர் 20-ம் தேதி நடைபெறும். அன்று நள்ளிரவு 12 மணிக்கு சிம்ம வாகனத்தில் கடற்கரைக்கு எழுந்தருளும் முத்தாரம்மன், பல்வேறு உருவங்களில் வரும் மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெறும்.
இந்த முக்கிய நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
