ஜெம் வீரமணி வழக்கில் 2 அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர அனுமதி


 சென்னை: ஜெம் வீரமணி வழக்கில் திமுகவை தொடர்புபடுத்திப் பேசியதாகக் கூறி, தமிழக அமைச்சர்கள் சிடிஆர். நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு எதிராக ரூ.1 கோடியே 1 லட்சம் மானநஷ்டஈடு கோரி அவதூறு வழக்கு தொடர திமுகவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான வழக்கில், முந்தைய திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் அவரைத் தப்பிக்கவிட்டதாக அமைச்சர்கள் நிர்மல்குமார் மற்றும் ஆதவ் அர்ஜூனா குற்றம்சாட்டி பேசியிருந்தனர்.


இதே விவகாரம் தொடர்பாக தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவும் சமூக வலைதளங்களில் திமுகவை குற்றம்சாட்டி பதிவுகளை வெளியிட்டிருந்தது.


இதையடுத்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். திமுகவுக்கு எதிராக வெளியிடப்பட்ட அவதூறு கருத்துகளை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும், ரூ.1 கோடியே 1 லட்சம் மானநஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.


ஜெம் வீரமணிக்கு எதிரான புகார் கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி பெறப்பட்ட நிலையில், மறுநாளே வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு தொடர முன்கூட்டியே சட்டரீதியான நோட்டீஸ் வழங்கப்படவில்லை என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு திமுக தரப்பு, இந்த வழக்கு அமைச்சர்கள் என்ற முறையில் அல்லாமல் தனிநபர்கள் என்ற முறையிலேயே தொடரப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தது.


இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கே.ஜி. திலகவதி, திமுக சார்பில் அவதூறு வழக்கு தொடர அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Previous Next

نموذج الاتصال