கூட்டுறவு அங்காடிகளில் மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்கள்: அமைச்சர் உறுதி


 தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், கூட்டுறவு அங்காடிகள் மூலம் மலிவு விலையில் பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ப. வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.


ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து சன்ன ரக அரிசியின் வரத்து குறைந்துள்ளதால் தமிழகத்தில் அதன் விலை அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.


அரசின் கையிருப்பில் உள்ள ஒரு லட்சம் மெட்ரிக் டன் சன்ன ரக அரிசியில், முதற்கட்டமாக 25,000 மெட்ரிக் டன் அரிசியைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு இந்த அரிசி விற்பனை செய்யப்படும். ஒருவர் அதிகபட்சமாக 5 கிலோ வரை வாங்கலாம். இந்த வார இறுதியில் விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடம் இருந்து முதற்கட்டமாக 500 மெட்ரிக் டன் துவரம் பருப்பைக் கொள்முதல் செய்து, கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


மேலும், அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் பொன்னி புழுங்கல் அரிசி கிலோ ரூ.60-க்கும், உளுந்தம் பருப்பு கிலோ ரூ.140-க்கும், பூண்டு மற்றும் தனியா தலா கிலோ ரூ.240-க்கும், மிளகாய் கிலோ ரூ.330-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.


உணவுப் பொருட்களைப் பதுக்கி வைத்து செயற்கையாக விலையை உயர்த்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார். இதைக் கண்காணிக்க மாவட்ட அளவில் விலைக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


அடுத்த ஓராண்டுக்குத் தேவையான அரிசி இருப்பும், சர்க்கரை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களின் அடுத்த மூன்று மாதத் தேவைக்கான இருப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Previous Next

نموذج الاتصال