தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி ஜந்தர் மந்தரில் 3-வது நாள் போராட்டம்


 புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டம் 3-வது நாளாக நீடித்தது.


வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியான எஸ்ஐஆரில் முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கு பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, கடந்த 2-ம் தேதி காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் போராட்டத்தை தொடங்கின.


முதல் நாளில் 700-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். 2-வது நாளிலும் ஏராளமானோர் ஜந்தர் மந்தரில் திரண்ட நிலையில், அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் சில இடங்களில் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


3-வது நாளான ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் போராட்டத்தில் அதிக அளவில் மக்கள் திரண்டனர். போலீஸார் அமைத்திருந்த தடுப்புகளைத் தாண்டிச் செல்ல சிலர் முயன்றதால் மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


பாதுகாப்பு ஏற்பாடுகளாக ஜந்தர் மந்தர் பகுதியில் 5,000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அதிவிரைவுப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதுடன், முக்கிய பகுதிகளில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.


ஜன்பத் சாலை, நாடாளுமன்ற மார்க், கேரள பவன் உள்ளிட்ட பகுதிகள் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன.


இதனிடையே, அக்டோபர் 6-ம் தேதி டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இந்தியா கூட்டணி ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதற்காக காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் டெல்லியில் திரண்டு வருகின்றனர்.

Previous Next

نموذج الاتصال