UPI பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தும் முடிவைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
புதன்கிழமை வெளியிட்ட காணொலி செய்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முன் பிரதமர் மோடி பணிந்து செல்வதாக ராகுல் காந்தி விமர்சித்தார். மேலும், UPI மீதான புதிய கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, ரூ.2,000-க்கு மேற்பட்ட தகுதியான நபர் முதல் வணிகர் வரையிலான UPI பரிவர்த்தனைகளுக்கு அக்டோபர் 15, 2026 முதல் 0.4 சதவீத Merchant Discount Rate (MDR) விதிக்கப்படும் என புதிய வணிகக் கட்டண நடைமுறை அறிவிக்கப்பட்டது.
இந்தக் கட்டணத்தை வாடிக்கையாளரிடம் நேரடியாக வசூலிக்க முடியாது என்றும், வணிக நிறுவனமே ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு இந்தக் கட்டணம் அதிகபட்சமாக ரூ.300 ஆக இருக்கும்.
ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மேற்கொள்ளப்படும் UPI பணப் பரிமாற்றங்கள் தொடர்ந்து இலவசமாக இருக்கும்.
இந்த புதிய நடைமுறையை ராகுல் காந்தி ‘UPI வரி’ என விமர்சித்துள்ளார். வணிகர்களிடம் விதிக்கப்படும் கட்டணம் இறுதியில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளில் சேர்க்கப்பட்டு, வாடிக்கையாளர்களிடமிருந்து மறைமுகமாக வசூலிக்கப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்காவைச் சேர்ந்த பணப் பரிவர்த்தனை நிறுவனங்கள் இந்தியாவின் பூஜ்ய MDR கொள்கைக்கு நீண்டகாலமாக எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், புதிய நடைமுறை அந்தத் திசையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
UPI கட்டண முறையில் மாற்றம் தொடர்பாக மத்திய அரசின் முடிவை எதிர்த்து அவர் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.
