வட அரபிக்கடலில் சர்வதேச கடற்பகுதியில் இந்திய கடற்படையின் போர்க்கப்பலும், பாகிஸ்தான் கடற்படையின் PNS Hunain கப்பலும் செப்டம்பர் 15-ம் தேதி மாலை மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓமன் வளைகுடாவில் இருந்து சுமார் 120 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படையின் போர்க்கப்பலை நோக்கி PNS Hunain கப்பல் அதிக வேகத்தில் நெருங்கியதாகவும், பாதுகாப்பாகவும் உரிய நேரத்திலும் கப்பலைத் திருப்ப முடியாததால் லேசான மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
மோதலில் PNS Hunain கப்பலுக்கு சேதம் ஏற்பட்டதாகவும், அது தனது துறைமுகத்தை நோக்கிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய போர்க்கப்பலுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. தொடர்ந்து வழக்கமான கண்காணிப்புப் பணியை இந்திய கப்பல் மேற்கொண்டது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தூதரகத்தின் பொறுப்பு அதிகாரியை இந்திய வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை அழைத்து கடும் எதிர்ப்பை பதிவு செய்தது.
1991-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஒப்பந்தத்தின் 10-வது பிரிவின்படி, சர்வதேச கடற்பகுதியில் இரு நாடுகளின் கடற்படைக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒன்றையொன்று 3 நாட்டிக்கல் மைலுக்கு குறைவான தூரத்தில் நெருங்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைக்கு எதிராக பாகிஸ்தான் கடற்படை கப்பலின் செயல்பாடு அமைந்ததாக இந்தியா தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்த விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் பொறுப்பு அதிகாரியும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திடம் இதேபோன்ற எதிர்ப்பை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
