ஷேசாத் பாட்டி நெட்வொர்க் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு: மத்திய அரசு நடவடிக்கை


 பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படுவதாகக் கூறப்படும் ஷேசாத் பாட்டி நெட்வொர்க்கை பயங்கரவாத அமைப்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.


சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டமான UAPA-வின் 35-வது பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த அமைப்பு UAPA சட்டத்தின் முதல் அட்டவணையில் பயங்கரவாத அமைப்பாக சேர்க்கப்பட்டுள்ளது.


ஷேசாத் பாட்டி நெட்வொர்க் எல்லை தாண்டி ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை கடத்துவதில் ஈடுபட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இளைஞர்கள் மற்றும் சிறிய அளவிலான குற்றங்களில் ஈடுபடுபவர்களை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முயன்றதாகவும் கூறப்பட்டுள்ளது.


மேலும், டிஜிட்டல் தகவல் தொடர்பு தளங்கள் மூலம் தூண்டுதல் மற்றும் வெறுப்பை ஏற்படுத்தும் உள்ளடக்கங்களை பரப்பியதாகவும், நாட்டின் ஜனநாயக அமைப்பு, மத நல்லிணக்கம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்திற்கு முன்பாக, பாட்டி நெட்வொர்க்குடன் தொடர்புடையதாகக் கூறப்பட்ட குழுக்களுக்கு எதிராக நாடு முழுவதும் பாதுகாப்பு அமைப்புகள் நடவடிக்கை மேற்கொண்டன. 14 மாநிலங்களில் நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் 253 பேர் கைது செய்யப்பட்டதாகவும், வெடிபொருட்கள், துப்பாக்கிகள் மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் கையெறி குண்டுகள், ஐஇடி சாதனங்கள், கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஷேசாத் பாட்டி மீது வெடிகுண்டு தயாரிப்பு, சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விநியோகித்தது தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நெட்வொர்க்குடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக பல்வேறு இடங்களில் சட்டவிரோத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Previous Next

نموذج الاتصال