UCC விவகாரத்தில் ஐக்கிய ஜனதா தளம் நிலைப்பாடு; நிதிஷ் குமார் வாரிசு குறித்து கவனம்

ஐக்கிய ஜனதா தளம் சார்பில் பிஹார் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்காக வெள்ளிக்கிழமை ஒரு நாள் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கட்சித் தலைவர் நிதிஷ் குமார், தேசிய செயல் தலைவர் சஞ்சய் குமார் ஜா, அமைச்சர்கள் பிஜேந்திர பிரசாத் யாதவ், விஜய் குமார் சவுத்ரி, சட்டப்பேரவை கட்சித் தலைவர் ஸ்ரவண் குமார் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். சுகாதாரத் துறை அமைச்சர் நிஷாந்த் குமாரும் பேச உள்ளார்.

இந்த நிகழ்ச்சி மூலம் நிதிஷ் குமாரின் ஆட்சி மரபை வலுப்படுத்துவதுடன், அவரது மகனும் சுகாதாரத் துறை அமைச்சருமான நிஷாந்த் குமாரின் அரசியல் பங்களிப்பை முன்னிறுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிவிப்பு ஐக்கிய ஜனதா தளத்துக்கு முக்கியமான விவாதமாகியுள்ளது.

பொது சிவில் சட்டத்துக்கு கட்சி கொள்கை ரீதியாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், பரவலான ஆலோசனையும் பரஸ்பர ஒருமித்த கருத்தும் ஏற்பட்ட பிறகே அது அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே இதுவரையிலான கட்சியின் நிலைப்பாடாக இருந்துள்ளது.

2017-ம் ஆண்டு சட்ட ஆணையம் கருத்து கேட்டபோதும் இதே நிலைப்பாட்டை ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்திருந்தது. 2023-24 காலகட்டத்திலும் இந்த நிலைப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

சமீபத்திய வாரங்களில், தேசிய அளவில் பொது சிவில் சட்டத்தை கட்சி எதிர்க்காது என்றாலும், பிஹாரில் மட்டும் அதை அமல்படுத்தக் கூடாது என்று சில கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நளந்தா மக்களவைத் தொகுதி உறுப்பினர் கவுசலேந்திர குமார், “பிஹாரில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படாது” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, வெள்ளிக்கிழமை நடைபெறும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பொது சிவில் சட்டம் குறித்து நேரடியாக விவாதிக்கப்படுமா என்பது தெளிவாகவில்லை. சட்டமன்ற நடைமுறைகள் மற்றும் தொகுதி சார்ந்த பிரச்சினைகளை திறம்பட எழுப்புவது தொடர்பாக உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிப்பதே நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் என கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Previous Next

نموذج الاتصال