இந்திய விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படுவது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் சொந்த திறன்களை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்று இஸ்ரோ ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரோவின் ஆராய்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவை பொதுமக்களின் நிதியில் உருவாக்கப்பட்டவை என்பதால், அவை தனியார் நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த விலையில் மாற்றப்படக் கூடாது என்றும் ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
இது தொடர்பாக பல்வேறு இஸ்ரோ ஊழியர் சங்கங்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைக் குழு செப்டம்பர் 4-ம் தேதி இஸ்ரோ தலைவர் வி. நாராயணனுக்கு கடிதம் அனுப்பியது. இதையடுத்து, இஸ்ரோவை தனியார்மயமாக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும், தனியார் துறையுடன் இணைந்து விண்வெளிப் பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் அதே நேரத்தில் இஸ்ரோவின் திறன்கள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய குறிப்பில், தனியார் துறை, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்திய விண்வெளித் துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்பதில் தங்களுக்கு எதிர்ப்பு இல்லை என்று ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அதே நேரத்தில், தனியார் பங்களிப்பு தேசிய திறனை வலுப்படுத்த வேண்டும்; இஸ்ரோவின் அடிப்படை செயல்பாடுகளை பலவீனப்படுத்தக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளன.
விண்வெளி ஏவுதல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு தேவைப்படலாம் என்றும், ஆனால் இஸ்ரோ உருவாக்கிய முதிர்ந்த தொழில்நுட்பங்கள் அனைத்தும் தனியார் நிறுவனங்களுக்கு மாற்றப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக LVM3 மற்றும் உருவாக்கத்தில் உள்ள NGLV போன்ற மேம்பட்ட ராக்கெட் அமைப்புகள் இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் தொடர வேண்டும் என்றும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு முதல் தயாரிப்பு, ஒருங்கிணைப்பு, சோதனை மற்றும் ஏவுதல் வரையிலான முழுமையான திறன் இஸ்ரோவிடம் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
