தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிப் பகிர்வு தொடர்பான பரிந்துரை அறிக்கை டிசம்பர் மாதத்துக்குள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என மாநில நிதி ஆணையத் தலைவர் கே. அலாவுதீன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் 7-வது மாநில நிதி ஆணையம் மற்றும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் மற்றும் நிதி நிலையை மேம்படுத்துவது தொடர்பான தேசிய அளவிலான கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் நகராட்சி நிர்வாகத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சித் துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் எம். கோவிந்த ராவ், கேரள முன்னாள் தலைமைச் செயலர் எஸ்.எம். விஜயானந்த் உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர்.
தமிழகத்தில் நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான 7-வது மாநில நிதி ஆணையம் அமைக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
மாநில அரசின் நிதியில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு எந்த அளவுக்கு நிதி பகிர்ந்தளிக்க வேண்டும், உள்ளாட்சி அமைப்புகள் தங்களது சொந்த நிதி ஆதாரங்களை எவ்வாறு அதிகரிப்பது, பொதுமக்களுக்கான சேவை வழங்கும் திறனை எவ்வாறு மேம்படுத்துவது ஆகிய 3 முக்கிய அம்சங்கள் குறித்து ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.
இதுதொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களின் உள்ளாட்சி நிர்வாக நடைமுறைகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது நடைபெறும் கருத்தரங்கில் பெறப்படும் ஆலோசனைகளையும் இணைத்து, டிசம்பர் மாதத்துக்குள் பரிந்துரை அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என மாநில நிதி ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார்.
