லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அரசியல் பழிவாங்கல்: ஸ்டாலின், கே.என்.நேரு குற்றச்சாட்டு


 சென்னை/திருச்சி: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடவடிக்கை முழுக்க அரசியல் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கே.என்.நேரு மீதான சோதனை அரசியல் காரணங்களுக்காகவே நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். புதிய அரசின் நடவடிக்கைகளை மக்கள் அறிந்துள்ளதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு கே.என்.நேருவும் திமுகவும் அஞ்சமாட்டோம் என்றும் அவர் கூறினார்.


சட்டத்தின் வழியில் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்கொண்டு வெல்வோம் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


இதனிடையே, திருச்சியில் தனது வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து கே.என்.நேரு செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.


கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாகவும், இதுதொடர்பாக தனது பெயர் உள்பட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி சோதனை நடத்த அதிகாரிகள் வந்ததாக அவர் தெரிவித்தார்.


சுமார் 7 மணி நேரம் சோதனை நடைபெற்றதாகவும், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் கே.என்.நேரு கூறினார். அலுவலகம் தொடர்பான ஒரு கோப்பை மட்டும் அதிகாரிகள் நகல் எடுத்துச் சென்றதாகவும், தன்னிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு சோதனையை முடித்துச் சென்றதாகவும் தெரிவித்தார்.


இந்த வழக்கில் நீதிமன்றத்தை நாடி தான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன் என்றும் அவர் கூறினார். தனது வீட்டிலும், தன்னைச் சார்ந்தவர்களின் வீடுகளிலும் தற்போது 3-வது முறையாக சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


சட்டப்பேரவையில் ஆளும் கட்சி குறித்து அடிக்கடி கேள்வி எழுப்புவதால் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கே.என்.நேரு தெரிவித்தார்.

Previous Next

نموذج الاتصال