ஜார்க்கண்ட் அமைச்சர் சுதிவ்ய குமார் சோனு மாரடைப்பால் காலமானார்


 ராஞ்சி: ஜார்க்கண்ட் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி, இளைஞர் விவகாரங்கள் துறை அமைச்சர் சுதிவ்ய குமார் சோனு, மாரடைப்பு காரணமாக தனது 54-வது வயதில் காலமானார்.


ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த சுதிவ்ய குமார் சோனு, கிரிதிஹ் சதார் சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்ற அவர், 2024-ம் ஆண்டு தேர்தலிலும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


2024-ம் ஆண்டு மீண்டும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அமைச்சரவையில் சுதிவ்ய குமார் சோனு அமைச்சராக பொறுப்பேற்றார்.


வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை கிரிதிஹில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.


மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமைச்சர் சுதிவ்ய குமார் சோனுவின் திடீர் மறைவு ஜார்க்கண்ட் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Previous Next

نموذج الاتصال