சென்னை: சிறப்பு ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ரேஷன் கடை பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பொது விநியோகத் திட்டப் பணிகளுடன், ஆதார் சரிபார்ப்பு, மகளிர் உரிமைத் தொகை, பொங்கல் பரிசுத் தொகுப்பு, தாயுமானவர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றனர்.
அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்க வேண்டும், கூடுதல் பணியாளர்கள் மற்றும் பிஓஎஸ் கருவிகளை வழங்க வேண்டும், எடையாளர்களை நியமிக்க வேண்டும், 25 சதவீதம் சிறப்பு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ரேஷன் கடை பணியாளர்கள் முன்வைத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செப்டம்பர் 10-ம் தேதி வரை போராட்டம் தொடரும் என சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், முதல்வர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
