சென்னை: இளம் பெண்களிடம் அத்துமீறி நடக்க முயன்றதாக சினிமா விநியோகஸ்தரை பாண்டிபஜார் போலீஸார் கைது செய்தனர்.
நுங்கம்பாக்கம் காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்த வில்லியம் அலெக்சாண்டர் என்ற அலெக்ஸ் (38), சினிமா விநியோகஸ்தராக உள்ளார்.
அவர் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி தி.நகர் திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தார்.
அப்போது அவரது நண்பரான ஜெய் என்பவர், தனக்கு அறிமுகமான 23 வயது இளம்பெண் ஒருவரை ஓட்டல் அறைக்கு அழைத்து வந்துள்ளார்.
அந்த இளம்பெண்ணிடம் அலெக்ஸ் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், தனது தோழிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து ஓட்டலுக்கு வந்த அவரது தோழியிடமும் அலெக்ஸ் அத்துமீறி நடக்க முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அச்சமடைந்த இரு பெண்களும் அங்கிருந்து தப்பிச் சென்று சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பாண்டிபஜார் போலீஸார், இரு பெண்களிடமும் விசாரணை நடத்தினர்.
விசாரணையின் அடிப்படையில் சினிமா விநியோகஸ்தர் அலெக்சை போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் அவரது நண்பர் ஜெய்யை போலீஸார் தேடி வருகின்றனர்.
