புதுடெல்லி: கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளதாக பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர் தெரிவித்துள்ளார். இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக மட்டுமல்லாமல், வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார சக்தியாகவும், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வல்லரசாகவும் உருவெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பார்ட் டி வெவர், புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து இரு நாடுகளின் உயர்மட்ட தலைவர்கள் பங்கேற்ற கூட்டுச் சந்திப்பும் நடைபெற்றது. இதில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதுடன், ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பார்ட் டி வெவர், 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு வரும் முதல் பெல்ஜியம் பிரதமர் தாம் என தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலும் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
உலக அளவில் இந்தியாவின் குரல் வலுப்பெற்றுள்ளதுடன், முக்கிய புவிசார் அரசியல் சக்தியாகவும் நாடு உருவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தியா பெல்ஜியத்திற்கு முக்கியமான கூட்டாளி என்றும் குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கும் பெல்ஜியத்துக்கும் இடையிலான வர்த்தகம் பல நூற்றாண்டுகளாக தொடர்வதாகவும், தற்போது 235 பெல்ஜிய நிறுவனங்கள் இந்தியாவிலும், 95 இந்திய நிறுவனங்கள் பெல்ஜியத்திலும் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இரு நாடுகளுக்கிடையிலான சரக்குகள் சார்ந்த இருதரப்பு வர்த்தகம் 9.4 பில்லியன் யூரோக்களாக உள்ளது.
வர்த்தகத்தைத் தாண்டி பொருளாதாரம், அரசியல் மற்றும் உத்தி ரீதியாக இந்தியா-பெல்ஜியம் உறவை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல விரும்புவதாகவும் பார்ட் டி வெவர் தெரிவித்தார்.
