குவாண்டம் கணினிகளின் முக்கிய சிக்கலுக்கு புதிய தீர்வை கண்டறிந்த விஞ்ஞானிகள்


 பெங்களூரு: குவாண்டம் கணினிகளில் பயன்படுத்தப்படும் குவாண்டம் நிலைகளின் நிலைத்தன்மையை அதிகரிக்கும் புதிய முறையை பெங்களூருவில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தின் குவாண்டம் தகவல் மற்றும் கணினி ஆய்வக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.


பாரம்பரிய கணினிகள் தகவல்களை 0 மற்றும் 1 என்ற மின் நிலைகளாகப் பதிவு செய்து செயல்படுத்துகின்றன. ஆனால், குவாண்டம் கணினிகள் குவாண்டம் உலகின் தனித்துவமான பண்புகளைப் பயன்படுத்தி கணக்கீடுகளை மேற்கொள்கின்றன.


இதில் ‘குவாண்டம் என்டாங்கிள்மென்ட்’ எனப்படும் சிக்கலாக்க நிலை முக்கிய பங்கு வகிக்கிறது. இரண்டு துகள்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு ஒரே அமைப்பைப் போல செயல்படும் இந்த நிலை, வெளிப்புறச் சூழலுடன் தொடர்பு கொள்ளும்போது விரைவாக சிதைந்து விடும். இதனை ‘டிகோஹெரன்ஸ்’ என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.


சில நேரங்களில், இயல்பாக சிதைவதற்கு முன்பே குவாண்டம் என்டாங்கிள்மென்ட் திடீரென மறைந்து விடும். இதற்கு ‘என்டாங்கிள்மென்ட் சடன் டெத்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.


இந்தப் பிரச்சினையை சமாளிக்க இதுவரை மீண்டும் மீண்டும் திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவை அதிக செலவையும் கூடுதல் பிழைகளையும் ஏற்படுத்தக்கூடும்.


ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த பேராசிரியர் உர்பாசி சின்ஹா தலைமையிலான குழு, தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, சரியான நேரத்தில் ஒருமுறை மட்டும் செயல்படுத்தப்படும் புதிய முறையை உருவாக்கியுள்ளது.


இந்த ஒரே செயல்பாட்டை எந்த நேரத்தில் மேற்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து, குவாண்டம் சிதைவை தாமதப்படுத்தவும், திடீர் என்டாங்கிள்மென்ட் சிதைவைத் தவிர்க்கவும் முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.


இந்த ஆய்வு தற்போது கருத்தை நிரூபிக்கும் கட்டத்தில் உள்ளது. வெவ்வேறு குவாண்டம் கணினி அமைப்புகளில் இதன் பயன்பாட்டை மேலும் சோதிக்க வேண்டியுள்ளது. ஆய்வு முடிவுகள் Physical Review A ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன.

Previous Next

نموذج الاتصال