ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் தலித் வாக்குகள் கைகொடுத்தன: காங்கிரஸ்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்டுகளில் பாஜகவைக் காட்டிலும் காங்கிரஸ் அதிக இடங்களை வென்றுள்ளது. இதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தொடர்பான ‘தூய்மைப்படுத்தல்’ சர்ச்சையில் ஏற்பட்ட தலித் சமூகத்தின் எதிர்வினையும் காரணமாக அமைந்ததாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் தோடாஸ்ரா கூறுகையில், கார்கே மற்றும் தலித் மக்களை அவமதித்தது தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.

பட்டியலினத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்டுகளில் காங்கிரஸ் 542 இடங்களிலும், பாஜக 350 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அவர் கூறினார். இதன் மூலம் காங்கிரஸ் 192 இடங்கள் அதிகமாக பெற்றுள்ளது.

பட்டியலினப் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்டுகளில் காங்கிரஸ் 261 இடங்களிலும், பாஜக 186 இடங்களிலும் வென்றுள்ளது. பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்டுகளில் காங்கிரஸ் 53 இடங்களையும், பாஜக 39 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

அரசியலமைப்பு மற்றும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக பாஜக தொடர்ந்து பேசி வருவதாகவும், இதற்கு தலித் சமூகத்தினர் தேர்தல் மூலம் பதிலளித்துள்ளதாகவும் தோடாஸ்ரா கூறினார்.

உத்தராகண்ட் மாநிலம் ஹால்த்வானியில் கார்கே பங்கேற்ற கூட்டத்துக்குப் பிறகு, கூட்டம் நடைபெற்ற இடத்தில் ‘தூய்மைப்படுத்தும்’ சடங்கு நடத்தப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 1 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
 

Previous Next

نموذج الاتصال