இந்தியா, சீனா கூட்டாளிகளாக இருக்க வேண்டும்: வாங் யி


 புதுடெல்லி: இந்தியாவும் சீனாவும் கூட்டாளிகளாக செயல்பட வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையேயான சந்திப்பில் எட்டப்பட்ட மிக முக்கியமான ஒருமித்த கருத்து என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.


டெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த ஷி ஜின்பிங், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். இதையடுத்து, பிரிக்ஸ் மாநாட்டின் இடையே பிரதமர் மோடியுடன் சனிக்கிழமை மாலை இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.


இந்த சந்திப்பில் இந்தியா-சீனா உறவுகள் தொடர்பான மூலோபாயம், நீண்டகால அணுகுமுறை மற்றும் எதிர்கால திசை குறித்து இரு தலைவர்களும் வெளிப்படையாகவும் விரிவாகவும் ஆலோசித்ததாக வாங் யி தெரிவித்துள்ளார்.


இந்தியா மற்றும் சீனா ஒன்றின் பலத்தை மற்றொன்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும், பரஸ்பரம் ஆதரவளிக்க வேண்டும், இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் துணை நிற்க வேண்டும் என ஷி ஜின்பிங் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


எல்லைப் பகுதிகளில் அமைதியையும் நிலைத்தன்மையையும் இரு நாடுகளும் இணைந்து பேண வேண்டும் என்றும், பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நாடுகள் ஒன்றுக்கொன்று ஆதரவளிக்க வேண்டும் என்றும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியா-சீனா உறவுகளில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்திருந்தார். எதிர்கால உறவுகள் பரஸ்பர மரியாதை, உணர்வுகளை மதித்தல் மற்றும் பரஸ்பர நலன் ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும், கருத்து வேறுபாடுகள் பிரச்சினைகளாக மாறக் கூடாது என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.


ஐநா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, ஜி20 உள்ளிட்ட பலதரப்பு அமைப்புகளில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், உலக தெற்கின் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக வாங் யி தெரிவித்துள்ளார்.

Previous Next

نموذج الاتصال