புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு கால சேவைப் பணிகள் குறித்த “A Century of Service – The RSS in 100 Acts of Seva” என்ற ஆங்கில நூலை குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.
தெலங்கானாவின் முன்னாள் ஆளுநரும், புதுச்சேரியின் முன்னாள் துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இந்த நூலை எழுதியுள்ளார். புதுடெல்லியில் உள்ள உபராஷ்டிரபதி பவனில் செப்டம்பர் 15-ம் தேதி நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய சி.பி. ராதாகிருஷ்ணன், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு கால சேவைப் பணிகள், சமூகப் பொறுப்பு மற்றும் தேசக் கட்டமைப்பில் அதன் பங்களிப்புகளை இந்த நூல் பதிவு செய்வதாக தெரிவித்தார்.
நல்ல பணிகள் முறையாக பதிவு செய்யப்படாவிட்டால் அவை காலப்போக்கில் பொது நினைவிலிருந்து மறைந்துவிடும் என்றும், “இன்றைய செய்தி நாளைய வரலாறு” என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘சேவை என்பது தர்மம்; அது ஒரு கடமை’ என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படும் சேவைப் பணிகள் தொழிலாளர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏழை மற்றும் பின்தங்கிய பல்வேறு சமூகத்தினரை சென்றடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்கள் உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உதவிகளை வழங்கியதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
‘தனி மனித குணநலன் வளர்ப்பதன் மூலம் தேசக் கட்டமைப்பு’ என்ற கருப்பொருளை முன்வைக்கும் இந்த நூல், சேவைப் பணிகளின் பதிவாக மட்டுமல்லாமல் இந்தியாவின் சேவை மரபு, பண்பாடு மற்றும் தேசிய உணர்வை எதிர்கால தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லும் ஆவணமாகவும் அமையும் என துணைத் தலைவர் தெரிவித்தார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
