வாஷிங்டன்: ரஷ்யா மற்றும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை கொள்முதல் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீதம் வரை கூடுதல் சுங்க வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
‘லின்ட்சே ஓ. கிரகாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடை சட்டம் 2026’ என அழைக்கப்படும் இந்த மசோதா, பிரதிநிதிகள் சபையில் 214-211 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.
ரஷ்ய தலைவர்கள் மற்றும் அந்நாட்டின் எரிசக்தித் துறைக்கு எதிரான தடைகளுடன், கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஈடுபடும் கப்பல்கள் மீதும் தடைகளை விதிக்க இந்த மசோதா வழிவகுக்கிறது.
ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வர்த்தகம் உக்ரைனுக்கு எதிரான போருக்கான நிதி ஆதாரமாக இருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.
ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் சீனா, இந்தியா உள்ளிட்ட முக்கிய வர்த்தக நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை சுங்க வரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க அதிபருக்கு வழங்கும் வகையில் மசோதா உள்ளது.
முன்னதாக அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவில் நாடுகளின் பெயர்கள் நேரடியாக குறிப்பிடப்படவில்லை. அதற்கு பதிலாக அதிக அளவில் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் முதல் 5 நாடுகள் என்ற அடிப்படையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதாவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் அதன் இறுதி அமலாக்கம் தொடர்பான முடிவுகள் பின்னர் மேற்கொள்ளப்பட உள்ளன.
