நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சுரங்க ரயில் மோதியதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
நியூ ஜெர்சியைச் சேர்ந்த 24 வயதான மலாய்கா சித்ரே மற்றும் அவரது நண்பர் நவம் கவுல் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர். இருவரும் 2024-ம் ஆண்டு ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்தவர்கள்.
லோயர் மான்ஹட்டனில் உள்ள ஸ்பிரிங் ஸ்ட்ரீட் சுரங்க ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.14 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது. தெற்கு நோக்கிச் சென்ற 4-ம் எண் சுரங்க ரயில் தண்டவாளத்தில் இருந்த இருவர் மீதும் மோதியது.
ரயில் ஓட்டுநர் தண்டவாளத்தில் இருவர் இருப்பதை கவனித்து அவசர பிரேக்கை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ரயிலை உடனடியாக நிறுத்த முடியவில்லை. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவத்தின்போது ரயிலில் சுமார் 100 பயணிகள் இருந்ததாகவும், பின்னர் அவர்கள் பாதுகாப்பாக நடைமேடைக்கு வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலாய்கா சித்ரே, நியூ ஜெர்சியின் டேட்டன் பகுதியைச் சேர்ந்தவர். அவர் அகாடியா பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததுடன், டெம்பிள் பல்கலைக்கழகத்தில் மருந்தியல் முனைவர் படிப்பையும் தொடரத் தொடங்கியிருந்தார்.
நவம் கவுல், நியூ ஜெர்சியின் சாயர்வில்லே பகுதியைச் சேர்ந்தவர். ரட்கர்ஸ் பிசினஸ் ஸ்கூலில் நிதித்துறையில் படித்த அவர், ப்ளூம்பெர்க் நிறுவனத்தில் நிதித் தரவு ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
இருவரும் தண்டவாளத்துக்கு எப்படி சென்றனர் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்றபோது தண்டவாளத்தில் இறங்கியிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.
