சென்னை: நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் விஜய் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-இன் கீழ் முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
கடந்த 2021 மே முதல் 2026 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில், தங்களது வாழ்வாதாரம், உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அவர் தெரிவித்தார்.
ஜனநாயக உரிமைகளை மதிக்கும் அரசாக செயல்படுவது முக்கியம் என்றும், மனிதநேய மற்றும் ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் விஜய் கூறினார்.
கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டங்களில் பங்கேற்ற விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது கடந்த ஆட்சிக் காலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான நடைமுறைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
