வங்கி மேலாளரை அறைந்த வழக்கு: காவல் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு


 சென்னை: பாரத ஸ்டேட் வங்கி மேலாளரை அறைந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி கயல்விழி தாக்கல் செய்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை அடையாறில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளரை கன்னத்தில் அறைந்ததாக, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி மீது போலீஸார் கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.


இந்த வழக்கின் விசாரணைக்காக ஆஜரான கயல்விழியை போலீஸார் கைது செய்து பின்னர் சொந்தப் பிணையில் விடுவித்தனர்.


இந்நிலையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி கயல்விழி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.


இந்த விவகாரம் முழுக்க உரிமையியல் பிரச்சினை என்றும், அதை குற்றவியல் வழக்காக மாற்றியுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது. மேலும், வங்கி மேலாளர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியாக இல்லாத நபர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.


இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கயல்விழி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து, மனுவுக்கு காவல் துறையும் வங்கியின் மண்டல தலைமை மேலாளர் நமச்சிவாயமும் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.


வழக்கின் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Previous Next

نموذج الاتصال