சென்னை: பொதுமக்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் 11 முக்கிய இடங்களில் நவீன குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டம் பெருநிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதியின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக சென்னை மாநகராட்சிக்கும் பங்களிக்கும் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அண்ணாசாலை டிஎம்எஸ், மயிலாப்பூர் பேருந்து நிறுத்தம், வடபழனி ஜவஹர்லால் நேரு சாலை, வேளச்சேரி விஜயநகர் பேருந்து முனையம், வடபழனி சிம்ஸ் மருத்துவமனைக்கு வரும் மற்றும் செல்லும் வழிகள், கிண்டி சின்னமலை, ஆற்காடு சாலை ஆவிச்சி பள்ளி, ஆலந்தூர் மெட்ரோ, எழும்பூர் வடக்கு மற்றும் எழும்பூர் தெற்கு ஆகிய 11 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
புதிய பேருந்து நிறுத்தங்களில் குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறைகள் அமைக்கப்படும். மேலும், 24 மணி நேர சிசிடிவி கண்காணிப்பு, இலவச வைஃபை, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுப் பாதை, பேருந்து வழித்தட தகவல் திரைகள், உயர்தர மின் விளக்குகள் மற்றும் வெப்பத்தைத் தாங்கும் கூரை உள்ளிட்ட வசதிகளும் இடம்பெறும்.
பாதுகாப்பை உறுதி செய்ய உயர்தர பாதுகாப்புக் கண்ணாடிகளும் பொருத்தப்பட உள்ளன. பயணிகளின் வசதிக்காக செல்போன் சார்ஜ் செய்ய யுஎஸ்பி பாயின்ட்களும் அமைக்கப்பட உள்ளன.
சென்னையின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான சூழலை உருவாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
