எஃப்க்யூஎல் மோசடி: இளைஞர் தற்கொலைக்கு காவல் துறையே பொறுப்பு என அன்புமணி


 சென்னை: தென் மாவட்டங்களில் முதலீடு செய்த பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான எஃப்க்யூஎல் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் காவல் துறையும் பொறுப்பேற்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இந்த நிதி நிறுவனம், முதலீட்டுத் தொகையை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து குறுகிய காலத்தில் இரட்டிப்பாக்கித் தருவதாக விளம்பரம் செய்ததாக கூறப்படுகிறது. இதை நம்பி பலர் லட்சக்கணக்கில் முதலீடு செய்த நிலையில், நிறுவனம் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் காசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இராசு, இந்த நிறுவனத்தில் பெரும் தொகையை முதலீடு செய்ததுடன், முகவராகவும் செயல்பட்டு முதலீடுகளை திரட்டியிருந்தார். நிறுவனம் மூடப்பட்டதால் முதலீட்டாளர்களின் பணத்தைத் திருப்பித் தர முடியாத சூழலில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இத்தகைய மோசடி நிறுவனங்களை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் துறையின் முக்கிய கடமை என அன்புமணி தெரிவித்துள்ளார்.


அதிக வட்டி மற்றும் அதிக லாபம் அளிப்பதாக விளம்பரம் செய்து மக்களிடம் பணம் திரட்டும் நிறுவனங்கள் மீது முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்து, அவர்களது சொத்துகளை முடக்கி பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Previous Next

نموذج الاتصال