சென்னை: தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை விதித்து சுற்றறிக்கை பிறப்பிக்க காவல் துறை டிஜிபிக்கு என்ன அதிகாரம் உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை விதித்து காவல் துறை டிஜிபி கடந்த 2025 செப்டம்பரில் சுற்றறிக்கை பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களின்போது சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கக் கோரி ஈரோட்டைச் சேர்ந்த ஆர். அருண்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவில், கிராமப்புற கோயில் திருவிழாக்களின்போது ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை மற்றும் ரேக்ளா பந்தயம் உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம் என்றும், காவல் துறையின் நிபந்தனைகளைப் பின்பற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் போட்டிகள் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. மிருக வதை தடைச் சட்டம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலேயே டிஜிபி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சேவல் சண்டைக்கு தடை விதிக்கும் சுற்றறிக்கையை பிறப்பிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம் உள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், காவல் துறைக்கு பல்வேறு முக்கியப் பணிகள் உள்ள நிலையில், சேவல் சண்டை மற்றும் ஆடு சண்டைகளை கண்காணிப்பதுதான் காவல் துறையின் பணியா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
