விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள சேந்தனேந்தல் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (26), திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகளுடன் மண்டலமாணிக்கம் பகுதியில் வசித்து வந்தார். இவர் திருநெல்வேலி பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.
ஆகாஷ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது சொந்த ஊருக்கு வந்திருந்த ஆகாஷ், இன்று காலை இருசக்கர வாகனத்தில் திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
திருச்சுழி–பனையூர் சாலையில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத இருவர், ஆகாஷை வழிமறித்தனர். பின்னர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்த தாக்குதலில் ஆகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற திருச்சுழி டிஎஸ்பி பிரதீப் தலைமையிலான போலீஸார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலைக்கான காரணம் மற்றும் மர்ம நபர்களின் அடையாளம் குறித்து திருச்சுழி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
