கிருஷ்ணகிரி விநாயகர் கோயிலில் இஸ்லாமியர்கள் பூஜை பொருட்கள் வழங்கினர்


 கிருஷ்ணகிரி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி நகரில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்லாமியர்கள் பூஜை பொருட்களை வழங்கினர்.


கிருஷ்ணகிரி நகரின் சப்-ஜெயில் சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மிலாடி நபி விழாக் குழு தலைவர் அஸ்லாம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.


அவர்கள் கோயிலுக்கு தேவையான பூஜை பொருட்களை வழங்கினர். தொடர்ந்து, கோயிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இஸ்லாமியர்கள் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.


மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி விநாயகர் சதுர்த்தி நாளில் கோயிலுக்கு பூஜை பொருட்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 16 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக விழாக் குழு தலைவர் அஸ்லாம் தெரிவித்தார்.


நாட்டில் அனைத்து சமுதாய மக்களும் அமைதியுடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்பதே இந்த நிகழ்வின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.


சாதி, மத வேறுபாடுகள் இன்றி அனைவரும் சமமாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், கோயிலில் பூஜை பொருட்கள் வழங்கி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் காரமத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விநாயகர் சதுர்த்தி நாளில் நடைபெற்ற இந்த நிகழ்வு மத நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் நிகழ்வாக அமைந்தது.

Previous Next

نموذج الاتصال